‘பாரசிட்டமால்’ உள்பட அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு

‘பாரசிட்டமால்' உள்பட அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மருந்து கடைகளில் புதிய விலை 15 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2022-04-01 23:02 GMT
 சென்னை,

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இருக்கும் மருந்துகளின் விலையை இந்திய தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் வரைமுறை செய்கிறது. கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து இந்த ஆணையம் விலையை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சில மருந்துகளின் விலையை 10 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. அதன் பிறகு கொரோனா காலகட்டத்தில் ஓரிரு மருந்துகளின் விலையை மட்டும் உயர்த்தியது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மொத்த விற்பனை பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார ஆலோசகரின் பரிந்துரைப்படி, அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலையை ஏப்ரல் 1-ந் தேதி (நேற்று) முதல் 10.76 சதவீதம் உயர்த்துவதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஏற்கனவே தெரிவித்தது. அதன்படி, 872 மூலக்கூறுகள் அடங்கிய மருந்துகளின் விலை உயர்ந்து இருக்கிறது.

பாரசிட்டமால்

அதாவது காய்ச்சல், ரத்த அழுத்தம், ரத்தசோகை, நீரிழிவு, இதயநோய், புற்றுநோய், தோல் வியாதி, வலி, தொற்றுநோய் உள்பட சில நோய் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலக்கூறுகள் அடங்கிய மருந்துகளின் விலை, இந்த புதிய விலை பட்டியலில் உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக, ரத்த அழுத்த நோய் பிரச்சினைக்கு வழங்கப்படும் ‘டெல்மிசார்டன்’ மூலக்கூறு அடங்கிய மாத்திரை விலை 7 ரூபாய் 32 காசுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரசிட்டமால் மூலக்கூறு அடங்கிய மாத்திரை விலை 1 ரூபாய் 1 காசுக்கு நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோல் ஒவ்வொரு மூலக்கூறுகள் அடங்கிய மருந்துகளின் விலையையும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வகுத்துக்கொடுத்திருக்கிறது. இந்த மூலக்கூறு அடங்கிய மாத்திரைகளை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன. அந்த நிறுவனங்கள் தற்போது இந்த விலையில்தான் அதிகபட்ச விலையை நிர்ணயித்து விற்கமுடியும்.

15 நாட்கள் ஆகும்

புதிய விலை பட்டியல் உடனடியாக மருந்து கடைகளில் நடைமுறைக்கு வருமா என்பது பற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கே.செல்வனிடம் கேட்டபோது, ‘இந்த புதிய விலை உயர்வு மருந்து தயாரிப்பு நிறுவனங்களைப் பொறுத்தவரை இன்று (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டு, அட்டைகளாகவோ, பாட்டிலிலோ கடைகளுக்கு விற்பனைக்கு வருவதற்கு இன்னும் ஒரு வார காலமாவது ஆகும். மேலும் மருந்து கடைகளில் ஏற்கனவே இருப்பு உள்ள மருந்துகள் விற்கப்பட வேண்டும். எனவே இந்த புதிய விலை, மருந்து கடைகளில் நடைமுறைக்கு வருவதற்கு எப்படியும் 15 நாட்களாவது ஆகும். இந்த விலை உயர்வு காரணமாக, குறிப்பிட்ட மருந்து பொருட்களை ஒவ்வொரு மாதமும் வாங்குபவர்களின் மாதாந்திர பட்ஜெட் 5 முதல் 6 சதவீதம் வரை அதிகரிக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை’ என்றார்.

மேலும் செய்திகள்