நள்ளிரவில் பயங்கரம்: வீட்டில் தூங்கிய தாய், மகன் படுகொலை

வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய்-மகன் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-01 20:03 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 40). இவரது மனைவி சுபாஷினி(29). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். செல்வராஜ் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் குருக்களையம்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார்.

செல்வராஜின் தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் சவுந்திரம் (70), தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். செல்வராஜ் ஊருக்குள் உள்ள மற்றொரு வீட்டில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். அவர் அவ்வப்போது இரவில் தோட்டத்து வீட்டிற்கு சென்று தூங்குவது வழக்கம்.

அதன்படி செல்வராஜ் நேற்று முன்தினம் இரவு தோட்டத்து வீட்டிற்கு சென்று, அங்குள்ள மாட்டுக்கொட்டகையில் கட்டிலில் படுத்து தூங்கினார். அவரது தாய் சவுந்திரம் அருகில் மற்றொரு கட்டிலில் படுத்திருந்தார்.

வெட்டி படுகொலை

இந்த நிலையில் நள்ளிரவில் செல்வராஜின் தோட்டத்து வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் புகுந்தனர். அவர்கள், மாட்டு கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்த செல்வராஜ் மற்றும் அவரது தாய் சவுந்திரம் ஆகியோரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு ஓடிவிட்டனர். இதுபற்றி எரியோடு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜின் மனைவியே இந்த இரட்டை கொலையை அரங்கேற்றிய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

கள்ளக்காதல்

சுபாஷினிக்கும், அவரது உறவினரான ஒத்தப்பட்டியை சேர்ந்த கோபிகிருஷ்ணன்(29) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. ஆனால் அவர்களது கள்ளக்காதலுக்கு செல்வராஜ் இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டனர்.

இதையடுத்து கோபிகிருஷ்ணன், தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் செல்வராஜ் தோட்டத்து வீட்டுக்கு சென்று செல்வராஜையும், அவரது தாயையும் தீர்த்து கட்டினார். விசாரணையில் சுபாஷினி சிக்கினார். மேலும் ஒத்தப்பட்டியில் பதுங்கியிருந்த கோபிகிருஷ்ணன், அவரது நண்பர் ஆனந்த்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்