பள்ளிக்கு செல்லும் பாதை அடைப்பு மாணவர்களுடன் பொதுமக்கள் போராட்டம்

பள்ளிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-01 15:50 GMT
அரியாங்குப்பம்
பள்ளிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் மாணவர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதை வசதி

மணவெளி தொகுதி தவளக்குப்பம் அடுத்த ஆண்டியார்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆண்டியார்பாளையம், பிள்ளையார்திட்டு, கொருக்கமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 
இந்த பள்ளிக்கு செல்ல சாலை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த தனிநபர் நிலத்தின் வழியாக தான் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறி கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வழக்கமாக செல்லும் பாதையை வேலி போட்டு நிலத்தின் உரிமையாளர் அடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் அங்கு திரண்டனர். பின்னர் மாணவர்களுடன் சேர்ந்து பள்ளி வாசலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 
சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் போலீசாரின் வேண்டுகோளை ஏற்று தனிநபர் இடத்தில் இருந்த வேலி அகற்றப்பட்டது. 
இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர். இருப்பினும் இதற்கு அரசு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்