தேர்வுகள் குறித்த விவாத நிகழ்ச்சி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் முதல் அமைச்சர் ரங்கசாமி பங்கேற்பு
தேர்வுகள் குறித்து புதுவை மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.
புதுச்சேரி
தேர்வுகள் குறித்து புதுவை மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்றார்.
பிரதமர் கலந்துரையாடல்
இந்திய அளவில் நேரடியாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடி விவாத நிகழ்ச்சி நடந்தது.
டெல்லி தால்கட்டோரா அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இதனை மாணவர்கள் அனைவரும் கண்டு பயனடையும் விதமாக நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி புதுவை கல்வித்துறை சார்பில் புதுவையில் 178 பள்ளிகளில் ஒளிபரப்பப்பட்டது.
ரங்கசாமி பங்கேற்பு
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை முதல்-அமைச்சர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் மாணவர்களுடன் சேர்ந்து பார்வையிட்டனர்.
இதேபோல் கவர்னர் மாளிகையிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அங்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய்சவுத்ரி, பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருடன் 50 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பிரதமரின் உரையை கேட்டனர்.
கவர்னர் தமிழிசை
தெலுங்கானா கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கவனித்தார். பிரதமரின் உரைக்குப் பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னர் மாளிகையில் இருந்தபடி புதுவை மாணவ, மாணவிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.