ஸ்கூட்டர்- கார் மோதல்; பெண் பலி
வானூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பெண் பலியானார். விபத்து நடந்த பகுதியில் பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வானூர் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் பெண் பலியானார். விபத்து நடந்த பகுதியில் பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்கூட்டர்- கார் மோதல்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கீழ்கூத்தபாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி பவானி (வயது 53). அதே பகுதியை சேர்ந்தவர் ஜென்சி (44). இவர்கள் 2 பேரும் நேற்று ஸ்கூட்டரில் கிளியனூர் நோக்கி சென்றனர். பின்னர் புதுச்சேரி -திண்டிவனம் 4 வழிச்சாலையை கடக்க ரோட்டின் நடுப்பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த கார், எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
பெண் பலி
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த பவானியும் ஜென்சியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த ஜென்சியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பலியான பவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.