குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து கலையையும் கற்றுக் கொடுக்க வேண்டும்
குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து கலையையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து கலையையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.
கலைநிகழ்ச்சி
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கலை பண்பாட்டு துறை சார்பில் ‘சுப்ரமணிய பாரதியாரின், இந்திய விடுதலையும் மற்றும் வாழ்க்கையும்’ என்ற தலைப்பில் ஒளியும், ஒலியும், நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் காரைக்கால் கடற்கரை சாலையில் நடந்தது. அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
புதுச்சேரி கடற்கரையை ஒப்பிடும்போது காரைக்கால் கடற்கரை சிறியது தான். இதை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர், முதல்-அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். காரைக்கால் மாவட்டம் மேலும் வளர்ச்சியடைய என்னுடைய முயற்சி கண்டிப்பாக தொடரும்.
ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம்
இங்கு கூடியுள்ள பொதுமக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற கலைநிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் காரைக்காலில் தொடர்ந்து நடைபெறும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் காரைக்கால் பொதுமக்களுக்கு அனைத்து நல்ல திட்டங்களும், நன்மைகளும் கிடைக்க பாடுபடுவேன்.
காரைக்காலில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் எனது முக்கிய நோக்கமாகும். குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து கலையையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து கலைமாமணி சித்ரா கோபிநாத்தின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சிவராஜன், உதவி நூலக தகவல் அதிகாரி திருமேனிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.