பைக் ரேசிங்கில் ஈடுபட்டவரை மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விபத்துகளால், ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவதற்காக பைக்ரேசில் ஈடுபட்டவருக்கு சென்னை ஐகேர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.;
சென்னை,
கொருக்குப்பேட்டையை சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி பைக் ரேசில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து தான் பைக் ரேசிங்கில் ஈடுபடவில்லை என்றும். பைக்கின் பின்புறம் தான் அமைந்து இருந்தேன் என்றும், இதனால் தன்னை கைது செய்துள்ளதாக கூறி பிரவீன், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறையினர், பிரவீன் பைக்ரேசில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தையும் சாட்சியையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இதையடுத்து பிரவீனுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீர் வழங்கி உத்தரவிட்டார். மேலும், வாகன விபத்துகளால் மக்கள் எந்த அளவு பாதிப்பை சந்திக்கின்றனர் என்பதனை உணர்த்துவதற்காக, பிரவீனை ஒரு மாதம் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8.30 மணி முதல் காலை 12 மணி வரை வார்டு பாய் உதவியாளராக பணியாற்ற உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பணியின்போது தனக்கு கிடைத்த அனுபவத்தை அறிக்கையாக தாக்கல் செய்து மருத்துவரிடம் கொடுக்க வேண்டும் என்றும் இறுதியில் அந்த அறிக்கைகளை மொத்தமாக தொகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.