வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பா.ம.க.வின் போராட்டம் தொடரும் - அன்புமணி ராமதாஸ்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
"சுப்ரீம் கோர்ட்டு இன்று அளித்துள்ள தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனாலும், இதில் சில சாதக அம்சங்களும் இருக்கின்றன. 10.5 சதவீதம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் 7 காரணங்களைக் கூறி இட ஒதுக்கீட்டை ரத்து செய்தனர்.
அந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறு என்று இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. ஒரே ஒரு காரணத்தால்தான் இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதாவது புள்ளி விவரங்கள் இல்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிபதி தணிகாச்சலம் வழங்கிய அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவொரு முடிவு கிடையாது. இது ஒரு தொடர்ச்சிதான். இப்போது தமிழக அரசு உடனடியாக ஒரு ஆணையத்தை உருவாக்கி, வன்னியர்களின் சமூக பொருளாதார நிலை குறித்த புள்ளி விவரங்களைத் திரட்டி, உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி இந்த இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
எங்களுடைய வாழ்க்கையே போராட்டம் தான், எனவே தேவைப்பட்டால் நாங்கள் போராடுவோம். வன்னியர்கள் இடஒதுக்கீடு தொடர்பான பாமகவின் போராட்டம் தொடரும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் ஆலோசித்து எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.