செலவுக்கு பணம் தர மறுத்த தாயை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

கோவில் திருவிழா செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து தாயை வெட்டி கொலை செய்த மகனுக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-03-31 07:57 GMT
ராமநாதபுரம்,  

ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் அருகே உள்ள காணிக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 60). இவர் குடும்பத்துடன் மதுரை காமராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி ஊர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காணிக்கூர் வந்து தங்கி உள்ளார்.

பின்னர் 9-ந் தேதி காளிமுத்துவின் மகன் குருசாமி(39), திருவிழா செலவிற்காக தாய் முத்துப்பேச்சியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தரமறுக்கவே ஆத்திரமடைந்த குருசாமி தாய் என்றும் பாராமல் அருகில் கிடந்த அரிவாளை எடுத்து முத்துப்பேச்சியை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த முத்துப்பேச்சி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து அவரது தந்தை காளிமுத்து அளித்த புகாரின்பேரில் கோவிலாங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து குருசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுபத்ரா, தாயை கொலை செய்த குருசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்