தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளைக்காரனாக மாறிய ஓட்டல் அதிபர்
ஓட்டல் நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதால் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். கொள்ளை தொழில் போலீசில் மாட்டிவிட்டது பற்றி அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை பெசன்ட்நகரை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 28). கடந்த 25-ந்தேதி அன்று அவர் தனது வீடு அருகே தெருவில் நடந்து சென்றபோது, மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர், கிருத்திகாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றுவிட்டார். இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசில் கிருத்திகா புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கொள்ளைச்சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, கொள்ளை ஆசாமி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த ஆசாமி தொடர்ந்து அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் சுற்றி வருவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அதைவைத்து, குறிப்பிட்ட கொள்ளை ஆசாமியை போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் திவாகர் (வயது 26). நெய்வேலியை சேர்ந்தவர். டிப்ளமோ படிப்பு முடித்துள்ளார். கொள்ளை தொழிலில் ஈடுபட்டது பற்றி திவாகர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
டிப்ளமோ படித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்த நான் நெய்வேலியில் ஓட்டல் ஒன்று நடத்தி வந்தேன். அதில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. அதனால் கடனில் சிக்கித்தவித்தேன். அதைத்தொடர்ந்து சென்னைக்கு புறப்பட்டு வந்து, பெருங்குடி பகுதியில் நண்பர்களுடன் தங்கி இருந்தேன். உடனடியாக வேறு வேலை கிடைப்பது போல தெரியவில்லை. கடந்த 24-ந்தேதி அன்று மெரினா கடற்கரைக்கு வந்து, எதிர்கால திட்டம் பற்றி தனிமையில் யோசித்தேன். அப்போதுதான் கொள்ளையில் சிறிதுகாலம் ஈடுபட்டு, அதில் வரும் பணத்தில் கடனை அடைத்துவிட்டு பின்னர் வேறு தொழில் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
அதன்படி நண்பரின் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு சாஸ்திரிநகர் பக்கம் வந்தேன். முதலில் கல்லூரி மாணவி போன்ற தோற்றத்தில் இருந்த இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றேன். ஆனால் அது என் கைக்கு கிடைக்கவில்லை. அந்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்து 2-வது முயற்சியில் தங்கச்சங்கிலியை பறிக்க முடிந்தபோதும், போலீசில் என்னை மாட்டி விட்டுவிட்டது. சிறைக்கு போகும் நிலை ஏற்பட்டுவிட்டது. சிறையில் இருந்து வெளியில் வந்ததும் வேறு நல்ல தொழிலை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் இருந்து தங்கச்சங்கிலி மீட்கப்பட்டது.