2 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது - மருத்துவமனைக்கு சீல்...!
திருப்பூர் அருகே 2 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி டாக்டரை கைது செய்து மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி அருகே சந்தைபேட்டை எதிரில் கே.எஸ். கிளினிக் இரண்டு வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இந்த கிளினிக்கில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக புகார் வந்துள்ளது.
புகாரின் பேரில் அவினாசி வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி.சக்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் இன்று மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவரிடம், சான்றிதழ் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் மருத்துவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து சந்தேகம் அதிகரித்ததால், அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக அவினாசி போலீசார் மற்றும் தாசில்தார் ராகவி ஆகியோருக்கு மருத்துவ அதிகாரிகள் தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஜெயக்குமார் (வயது 42) சிகிச்சை அளித்து தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அனுமதியின்றி இயங்கி வந்த மருத்துவமனைக்கு அவினாசி தாசில்தார் ராகவி முன்னிலையில் சீல் வைத்தனர்.