டிரான்ஸ்பார்மரில் செம்பு பட்டை கம்பிகள் திருட்டு - 3 பேர் கைது...!
அம்மாபேட்டை அருகே டிரான்ஸ்பார்மரில் செம்பு பட்டை கம்பிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்மாபேட்டை,
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் நீரேற்று பாசன சங்கத்தினர், விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு ஆங்காங்கே நீரேற்று நிலையங்கள் அமைத்து வருகின்றனர். இதற்கான பணிகள் தற்போது விரைவாக நடத்து வருகின்றது.
இந்நிலையில் அம்மாபேட்டை அருகே உள்ள படவல்கால்வாய் பகுதியில் சின்னசாமி என்பவர் தோட்டத்தில் நடைபெற்றுவரும் பணியில் அங்கிருந்த ரான்ஸ்பார்மரில் ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள செம்பு பட்டை கம்பிகள் திருடப்பட்டது.
இதுகுறித்து குருவரெட்டியூர் நீரேற்று பாசன சங்க செயலாளர் தினேஷ்சேகர் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கோனேரிப்பட்டி பிரிவில் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செம்பு பட்டை கம்பிகளை திருடியது இவர்கள்தான் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பின்னர், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தமிழரசன் (26), கோபால் (23), கணேசன் (20) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.