அண்ணாநகரில் துணிகரம்: நீதிபதி வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அண்ணாநகரில் வசித்து வரும் நீதிபதி வீட்டில் நகை-பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-03-30 01:14 GMT
பூந்தமல்லி, 

சென்னை, அண்ணாநகர், ஏ.எச்.பிளாக் சாந்தி காலனி 3-வது தெருவை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 80). ஓய்வு பெற்ற நீதிபதியான இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு பூந்தமல்லியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அண்ணாநகரில் உள்ள வீட்டிற்க்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர்.

இதில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்