துபாய் பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பிய துரைமுருகன்

விமானத்தில் ஏறி அமர்ந்த பின்னர் துபாய் பயணத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பிய துரைமுருகன்.

Update: 2022-03-29 23:58 GMT
 ஆலந்தூர்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 நாள் துபாய் பயணம் முடிவடைந்து அவர் சென்னை திரும்பிய நிலையில், துபாய்க்கு 2 நாள் அரசு முறை பயணமாக அமைச்சர் துரை முருகன் நேற்று செல்ல இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.50 மணி விமானத்தில் துபாய் செல்ல அமைச்சர் துரைமுருகன் வந்தார். அப்போது அவரது விசாவில் பாஸ்போர்ட் எண் தவறுதலாக இருந்ததாக கூறி பயணத்தை ரத்து செய்த நிலையில், விசாவை சரி செய்து மாலை விமானத்தில் துபாய் செல்ல இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மாலை 6.50 மணிக்கு துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் விமான நிலையம் வந்தார்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் குடியுரிமை சோதனை முடித்து விமானத்தில் ஏறி அமர்ந்த அமைச்சர் துரைமுருகன் திடீரென அதிகாரிகளை அழைத்து பயணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் விமானத்தில் இருந்து இறங்கி காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இதன் பின்னர் விமானம் 10 நிமிடம் தாமதமாக துபாய் புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்