கழிவறையை மாணவி சுத்தம் செய்த விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

பள்ளி கழிவறையை மாணவி சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2022-03-29 21:52 GMT
சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைபள்ளியில் 206 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமுக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய சொன்னார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைபள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரி நடராஜன் தலைமையில், கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவியிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளித்தனர்.

பணியிட மாற்றம்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.

மேலும், ஆனம்பாக்கம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் பள்ளி தலைமை ஆசிரியை புஷ்பாவதியை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்