மத்திய அரசுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரியில் கடைகள் மூடல் தனியார் பஸ்கள் ஓடவில்லை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய அரசுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்தில் புதுச்சேரியில் நேற்று கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2022-03-29 16:39 GMT
புதுச்சேரி
மத்திய அரசுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்தில் புதுச்சேரியில் நேற்று கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள்

தொழிலாளர் சட்டங்களை திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. 
அதன்படி  நாடு முழுவதும் வங்கிகள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. 
புதுச்சேரியில் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச., எம்.எல்.எப். உள்பட அனைத்து தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன.

ரூ.500 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

அதன்படி புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகள், வங்கிகள் முடங்கின. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் 2-வது நாளாக நேற்று ரூ.500 கோடி வரை பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இது வணிகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
 மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு வரவில்லை. குறைந்த எண்ணிக்கையிலேயே பணியாளர்கள் வந்து இருந்தனர். பல்வேறு இடங்களில் வங்கி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடைகள் அடைப்பு

மாநிலம் முழுவதும் முக்கிய வீதிகளில் அத்தியாவசிய தேவையான மருந்துக் கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகள், ஒரு சில பெட்ரோல் பங்க்குகள் திறந்து இருந்தன. அங்கு எரிபொருள் நிரப்ப வாகனங்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 
குபேர் பஜார், பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட் ஆகியன மூடிக்கிடந்தன. அதேநேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன.
தியேட்டர்களில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. 
அரசு பள்ளி, கல்லூரிகள் இயங்கின. ஆனால் மாணவர் சிறப்பு பஸ்கள், தனியார் பஸ்கள் ஓடாததால் குறைந்த அளவிலேயே மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர்.
சில தனியார் பள்ளிகள் 9-ம் வகுப்பு வரை விடுமுறை விட்டு இருந்தன. ஆனால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு 2-வது திருப்புதல் தேர்வு வழக்கம்போல் நடந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனங்களில் கொண்டுவந்து விட்டு அழைத்துச் சென்றனர்.

தனியார் பஸ்கள் ஓடவில்லை

புதுவை மக்களின் போக்குவரத்து தேவையை தனியார் பஸ்கள் தான் நிறைவேற்றி வருகின்றன. முழு அடைப்பு போராட்டத்தால் நேற்று காலை  முதல் மாலை வரை தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.
பி.ஆர்.டி.சி. சார்பில் பஸ்கள் ஓடின. தமிழக அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் விடப்பட்டு இருந்தன. இருந்தபோதிலும் அவற்றில் கூட்டம் குறைவாகவே இருந்தது. 
வழக்கமாக முழு அடைப்பு என்றால் தமிழக அசு பஸ்கள் மாநில எல்லைப்பகுதி வரை வந்து அங்கேயே திரும்பி சென்று விடும். ஆனால் இந்த முறை புதுவை பஸ் நிலையத்துக்கே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன. 
அதேபோல் பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்களும் ஓடவில்லை. இதனால் ஆஸ்பத்திரி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

மறியல்- கைது

முழுஅடைப்பின்போது தொழிற்சங்கத்தினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பஸ்நிலையம், இந்திராகாந்தி சிலை, அண்ணாசிலை, ராஜா தியேட்டர் சந்திப்பு, அஜந்தா சந்திப்பு உள்ளிட்ட 12 இடங்களில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 
மொத்தத்தில் முழு அடைப்பு போராட்டத்தால் நேற்று பகல் முழுவதும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
மாலை 6 மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு அனைத்து பஸ்களும் ஓடத்தொடங்கியதால் மாமூல் வாழ்க்கை திரும்பியது. முழு அடைப்பின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாதவண்ணம் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன் தலைமையில் முக்கிய சந்திப்புகள், கடை வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்