புதுவையில் 12 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல் 4 தி மு க எம் எல் ஏ க்கள் உள்பட 1 300 பேர் கைது

தொழிற்சங்கங்கள் சார்பில் புதுவையில் 12 இடங்களில் நடந்த மறியலில் 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,300 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-29 15:23 GMT
புதுச்சேரி
தொழிற்சங்கங்கள் சார்பில் புதுவையில் 12 இடங்களில் நடந்த மறியலில் 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,300 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

மத்திய அரசின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தின. புதுவையில் தொழிற்சங்கங்கள் சார்பில்  முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. 
இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் ஆதரவு அளித்திருந்தன. இதனிடையே அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

4 எம்.எல்.ஏ.க்கள் கைது

புதுவை அண்ணா சிலை அருகே தி.மு.க. மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினரும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், சண்.குமாரவேல், கலியபெருமாள், குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், ஜே.வி.எஸ். சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்கவைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி.

ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் மாநில தலைவர் பாலாஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் ஐ.என்.டி.யு.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன் உள்பட பலர் இந்திராகாந்தி சிலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் சுப்பையா சிலையில் இருந்து பஸ் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்து பஸ் நிலைய வாசலில் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மறியலில் ஈடுபட்டவர்களை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

சி.ஐ.டி.யு., விடுதலை சிறுத்தைகள்

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ராஜா தியேட்டர் சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலுக்கு சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், பொதுச்செயலாளர் சீனுவாசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மறியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், பிரபுராஜ், மதிவாணன், சரவணன், உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை பெரியகடை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர்  தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயலாளர் செந்தில் தலைமையில் அஜந்தா சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதில் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன், நகர நிர்வாகிகள் துரை ஜெயக்குமார், அசோக், கன்னியப்பன், செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 

1,304 பேர் கைது

இதேபோல் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் கம்பன் கலையரங்கத்தில் இருந்து அண்ணாசிலை நோக்கி மறியல் போராட்டத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். புதுவை மாநில உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமையில் அண்ணாசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஒதியஞ்சலை போலீசார் கைது செய்தனர். 
மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, வில்லியனூர், பாகூர், தவளக்குப்பம் உள்ளிட்ட இடங்களிலும் மறியல் போராட்டங்கள் நடந்தது. புதுவையில் 12 இடங்களில் நடந்த மறியலின்போது மொத்தம் 4 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 1,304 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்