சேலம்: 16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஓட்டலில் புகுந்து ஒருவர் பலி
சேலம் அருகே 16 வயது சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஓட்டலில் புகுந்ததில் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேலம்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டையில் உள்ள சரவணன் என்பவருக்குச் சொந்தமான உணவகத்தில் சிலர் காலை உணவருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது சாலையில் வ.ஊ.சி நகரில் இருந்து முல்லைவாடி நோக்கி சென்ற டிராக்டர் ஒன்று திடீரென ஓட்டலுக்குள் புகுந்ததால் பரபரப்பு எழுந்தது.
இந்த விபத்தில் உணவருந்த வந்த இறைச்சிக்கடை வியாபாரி ஆறுமுகம் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பரோட்டா மாஸ்டர் மருது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது டிராக்டரை ஓட்டி வந்தது 16 வயது சிறுவன் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து டிராக்டரின் உரிமையாளர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆத்தூர் நகரப்பகுதியில் இது போன்ற கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் தண்ணீர் வண்டி டிராக்டர்கள் ஓட்டுவது சிறுவர்கள் தொடர்ந்து ஓட்டிவருவது வாடிக்கையாகி வருகிறது இதனை போக்குவரத்து போலீசாரும் சட்டம் ஒழுங்கு போலீசாரும் கண்டுகொள்வதில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்