ஓடும் காரில் திடீர் தீ - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
சிறுகனூர் அருகே ஓடும் காரில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சமயபுரம்,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக திட்டமிட்டு நேற்று நத்தம் பகுதியை சேர்ந்த உபயதுல்லா என்பவரின் காரை வாடகைக்கு பேசி எடுத்துச் சென்றனர். இந்த காரை நத்தம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவர் மகன் ராகேஷ் (வயது 24) என்பவர் ஓட்டிச்சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு மீண்டும் ஊருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். கார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்ட எல்லைப்பகுதியான பி.கே அகரம் என்ற இடம் அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உள்ளிட்ட காரில் இருந்த 7 பேரும் காரில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.
இது குறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நிலைய அதிகாரி முத்துக்குமார் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. காரில் இருந்த ஏசி கசிந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது தொடர்ந்து நீண்ட தூரம் பயணம் செய்ததால் எஞ்சின் சூடாகி தீ விபத்து நடந்ததா என்று தெரியவில்லை. இதுகுறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.