சென்னையில் மாநகர போக்குவரத்து சேவை பாதிப்பு பள்ளி-கல்லூரி மாணவர்கள் கடும் அவதி

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சென்னையில் 10 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

Update: 2022-03-28 23:53 GMT
சென்னை,

மத்திய அரசுக்கு எதிரான 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொ.மு.ச., கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கம் உள்பட அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருந்தது.

அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம், பா.ஜ.க. தொழிற்சங்கம் உள்பட சில தொழிற் சங்கங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்தநிலையில் போக்குவரத்து கழகங்கள் சார்பில் பஸ் தொழிலாளர்களுக்கு, ‘வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பொருட்படுத்தவில்லை.

10 சதவீத பஸ்கள்

சென்னையில் உள்ள 37 போக்குவரத்து பணிமனைகளில் இருந்து அன்றாடம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு 3 ஆயிரத்து 175 மாநகர பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். நேற்று வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றதால் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த பணியாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி நேற்று காலை 8 மணி வரையில் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 10 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. காலை வேளையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர், ஆஸ்பத்திரிகள் உள்பட அவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருந்து பரிதவித்து போனார்கள்.

வெளியூர் பயணிகள் அவதி

வெளியூரில் இருந்து பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்னை வந்த பயணிகளும் பஸ்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். எப்போது பஸ் வரும் என்று நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

சொற்ப எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் அந்த பஸ்களில் நிற்கக்கூட முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது. இதனால் கொரோனா சமூக இடைவெளி உத்தரவு கூட்டத்தில் நசுங்கி போனது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலையும் பல பயணிகளுக்கு ஏற்பட்டது.

மாணவர்கள் சிரமம்

பள்ளி மாணவ-மாணவிகளும் பஸ் கிடைக்காமல் மிகுந்த சோகத்துக்கு உள்ளாகினர்.

பிளஸ்-2 வகுப்புகளுக்கு நேற்று திருப்புதல் தேர்வு தொடங்கிய நிலையில், பஸ் டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றது மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. எப்படியாவது தேர்வுக்கு சென்றுவிட வேண்டும் என்ற மன நிலையில் சில மாணவர்கள் வேக, வேகமாக பள்ளிக்கூடத்துக்கு நடந்து சென்றார்கள். சிலர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டும் சென்றதை பார்க்க முடிந்தது.

பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பல பள்ளிக்கூடங்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து முன்கூட்டியே மாணவர்களை அனுப்பி வைத்தனர்.

பஸ் போக்குவரத்து சேவை பாதிப்பால் பள்ளி மாணவர்களை போன்று கல்லூரி மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

கூடுதல் கட்டண பஸ்கள்

சென்னையில் நேற்று மதியம் 11 மணி நேர நிலவரப்படி 347 பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டு மதியம் 3 மணி நிலவரப்படி 210 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இவ்வாறு இயக்கப்பட்ட பஸ்களிலும் பெரும்பாலானவை கூடுதல் கட்டணங்களை கொண்ட சொகுசு பஸ்களாகவே (சிவப்பு நிறம்) இருந்தன.

மேலும் செய்திகள்