குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதால் சென்னையில் மெட்ரோ, மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது
சென்னையில் வேலைநிறுத்த போராட்டத்தால் மாநகர பஸ்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டதால் மெட்ரோ, மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் புகார் கூறினர்.
சென்னை,
2 நாள் பொது வேலைநிறுத்தம் காரணமாக பஸ்கள் ஓடுமா? ஓடாதா? என்ற எண்ண ஓட்டம் பலரிடம் இருந்தது. இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. வழக்கமாக காலை வேளையில் மாநகர பஸ்கள் வரிசைகட்டி செல்வதை காண முடியும். ஆனால் நேற்று காலை வேளையில் மாநகர பஸ்களை பார்ப்பது அரிதாக இருந்தது.
அதே வேளையில் சென்னையில் வழக்கம்போல் மின்சார ரெயில்களும், மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. இந்தநிலையில் பஸ்சுக்காக காத்திருந்தால் குறிப்பிட்ட நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடியாது என்பதை உணர்ந்த ஊழியர்கள் தங்களது பார்வையை மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் பக்கம் திருப்பினார்கள். மாநகர பஸ்சை விட மெட்ரோ ரெயிலில் கூடுதல் கட்டணம் இருந்தாலும் வேறு வழியின்றி பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினர்.
எனவே சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது. ‘டிக்கெட்’ கவுண்ட்டர்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
அலைமோதிய கூட்டம்
வழக்கமாக மெட்ரோ ரெயில்களில் பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து செல்வார்கள். ஆனால் நேற்று மெட்ரோ ரெயில்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மின்சார ரெயில்கள் போன்று மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் நின்றபடி பயணம் செய்ததை காண முடிந்தது.
மின்சார ரெயில்களில் எப்போதும் காலை வேளையில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்தநிலையில் நேற்று கூடுதல் கூட்டம் காணப்பட்டது. ரெயில்களில் நிற்க கூட இடம் இல்லாமல், காற்று புக முடியாத அளவுக்கு பயணிகளின் தலைகளாகவே காட்சி அளித்தது. இதன் காரணமாக எழும்பூர், சென்டிரல் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களும் மிகுந்த பரபரப்புடன் இயங்கின.
ஆட்டோவில் அதிக கட்டணம்
‘நான் ஆட்டோக்காரன், நியாயம் உள்ள ரேட்டுக்காரன்’ என்று திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் ஒரு சில ஆட்டோ டிரைவர்களுக்கு மட்டுமே பொருந்தும். பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள், புயல், மழை வெள்ளம், வேலைநிறுத்தம் போன்ற இக்கட்டான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அடாவடி கட்டண வசூலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்பது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
அந்த வகையில் பொது வேலைநிறுத்ததால் நேற்று பஸ்கள் அதிகளவில் இயக்கப்படாததால் பஸ் நிறுத்தங்களை ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் ஆக்கிரமித்தன. பஸ்கள் கிடைக்காமல் அவதியுற்ற பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தனர்.
வழக்கமாக கோயம்பேட்டில் இருந்து அண்ணாநகருக்கு ஷேர் ஆட்டோவில் செல்ல ஒரு நபருக்கு ரூ.15 பயண கட்டணம் ஆகும். ஆனால் நேற்று ரூ.30 வசூலிக்கப்பட்டது. இதே போன்று ஷேர் ஆட்டோக்களில் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதே நிலைதான் பல இடங்களில் காணப்பட்டது. வழக்கமாக ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசும் பயணிகள் கூட சூழ்நிலையை உணர்ந்து அவர்கள் கேட்ட கட்டணத்தை கொடுத்து பயணம் செய்ததை காண முடிந்தது.
போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
ஆட்டோ டிரைவர்களின் மனிதாபிமானமற்ற செயலுக்கு கண்டன குரல்கள் எழுந்தது.
இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று ஆட்டோ டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் இன்றும் வேலைநிறுத்த போராட்டம் தொடர்வதால், இன்றைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.