கருத்து வேறுபாடால் முறிந்த காதல் எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை

கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதல் முறிந்ததால் எலி மருந்து தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-03-28 14:58 GMT
அரியாங்குப்பம்
புதுச்சேரி அரியாங்குப்பம் மார்க்கெட் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் (வயது 23). மயிலாடுதுறை மாவட்டம் அண்ணன் பெருமாள் கோவில் அருகே கரைமேடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். 
அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த ஒரு இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே காதலாக மாறியது.
இந்தநிலையில் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதல் முறிந்தது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். 
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்துபோனார்.
இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்