தனியார் மதுபான தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தனியார் மதுபான தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-03-27 18:07 GMT
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி தனியார் மதுபான தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் போராட்டம்
திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் மெயின் ரோட்டில் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும். தொடர்ந்து தொழிற்சாலையில் பணி வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 23-ந்தேதி முதல் தொடர் உள்ளுருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
அவர்களிடம் காட்டேரிக்குப்பம் போலீசார் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
மயங்கி விழுந்த பெண்
இந்நிலையில் 5-வது நாளாக இன்றும் தொழிலாளர்கள்  தொழிற்சாலையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த தனம் (வயது 53) என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டேரிக்குப்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதற்கிடையே தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிற்சாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போராட்ட களத்தில் பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்