மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த யு.ஜி.சி. அழைப்பு

மாநில பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத்தேர்வு CUET மூலம் மாணவர் சேர்க்கை நடத்த யு.ஜி.சி. அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2022-03-27 17:01 GMT
சென்னை, 

இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் அம்சம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு சில மாநில அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ள போதிலும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கையை பெருமளவு குறைத்துவிடும் என அந்த மாநில அரசுகள் கூறி வருகின்றன. எனவே இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அவை வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக யுஜிசி சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், “இளநிலை பட்டப்படிப்புகளில் பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலோ அல்லது நுழைவுத் தேர்வுகள் மூலமாகவோ பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. இவ்வாறு பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு சில சமயங்களில், வெவ்வேறு நுழைவுத் தேர்வுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுவதும் உண்டு. 

இதுபோல், பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையிலும், பல பாடத்திட்டங்களில் படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பினை வழங்கும் விதமாகவும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை (CUET) நடத்த யுஜிசி முடிவு செய்துள்ளது. எனவே, அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவை இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முறையை நடப்பாண்டு (2022 - 23) முதல் அறிமுகப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றன” என்று அதில் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்