சிவகங்கையில் அடுத்தடுத்து 3 கோவில்களில் திருட்டு - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு..!
சோழபுரம் கிராமத்தில் உள்ள 3 கோவில்களில் மர்ம நபர் புகுந்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாட்டம், சோழபுரம் கிராமத்தில் நாகவள்ளி அம்மன் கோவில், தென்னந்தேவி விநாயகர் ஆலயம், முத்துமாரியம்மன் கோவில் என 3 கோவில்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளது. இந்த கோவில்களில் நேற்று நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த அம்மன் தங்க தாலி, பித்தளை குத்துவிளக்குகள், என 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர்.
அத்துடன் முத்துமாரியம்மன் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மினி சி.சி.டி.வி கேமராக்களையும் எடுத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்கவந்த பூசாரிகள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பூசாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சிவகங்கை நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.