துறைமுக ஊழியர்கள் 5-ந்தேதி வேலை நிறுத்தம்

துறைமுக பணியாளர்களின் 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

Update: 2022-03-27 00:09 GMT
துறைமுக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இதுகுறித்து இந்திய தேசிய துறைமுக தொழிலாளர் சம்மேளன தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.கே.சமந்தராய் மற்றும் அகில இந்திய துறைமுகம் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பி.எம்.முகமது ஹனீப் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்புக்கு ஏற்ப நாளை (திங்கட்கிழமை) மற்றும் வருகிற 29-ந்தேதி ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். அதனைத்தொடர்ந்து, நாட்டில் சேவை நிறுவனங்களாக செயல்பட்டு வந்த பெரிய துறைமுகங்களை தனியார் லாப மீட்ட வசதியாக மாற்றுவதற்கும், துறைமுக முனையங்களை தனியார் இயக்குபவர்களிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

7 அம்ச கோரிக்கை

9 முக்கிய துறைமுகங்களில் 31 லாப மீட்டும் சரக்கு கையாளும் முனையங்களை தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.14 ஆயிரத்து 485 கோடிக்கு தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சரத்துகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற ஏப்ரல் 5-ந்தேதி துறைமுக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் மீண்டும் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதில் 11 பெரிய துறைமுகங்களில் பணியாற்றும் 1 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் துறைமுகங்களில் சரக்கு ஏற்றுவது, இறக்குவது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுவதால் துறைமுக நிர்வாகத்துக்கு ரூ.400 கோடி வரை வருமானம் இழப்பு ஏற்படும். இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை தலைமை கமிஷனரிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் சென்னையில் நடந்த துறைமுக தொழிலாளர்களின் சம்மேளன தலைவர்கள் கூடி வருகிற 5-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

உடன் நீர் வழிபோக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் தி.நரேந்திரராவ் உள்பட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்