கோவிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
மதகடிப்பட்டில் 4 வழிச்சாலை பணிக்காக கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதகடிப்பட்டில் 4 வழிச்சாலை பணிக்காக கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
4 வழிச்சாலை பணி
புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக வீடுகள், கடைகள், மரங்கள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு எல்லை பகுதியில் சாலையின் நடுவே அரசமரத்துடன் பழமையான ஏழை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.
4 வழிச்சாலை பணிக்காக இந்த கோவிலை அகற்ற இன்று காலை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து கோவிலை அகற்ற வேண்டாம் எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் இந்த கோவிலை அகற்றினால் வேறு இடத்தில் பொதுமக்கள் வழிபடும் வகையில் புதிய கோவிலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் கோவிலை அகற்றாமல் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.