பிளாஸ்டிக் ஒழிப்பு - தாசில்தார் அதிரடி நடவடிக்கை...!
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வியாபாரிகளுக்கு தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கோத்தகிரி,
சுற்றுச் சூழலை பாதுகாப்புக்காக பல்வேறு விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.
இத்தைகைய பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிகாரிகள் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. மேலும் அபராதம் விதிப்பது மட்டும் தீர்வாகாது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் கோத்தகிரி தாசில்தார் காயத்தி தலைமையிலான அதிகாரிகள் இன்று காலை கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு சில வியாபாரிகள் தங்கள் கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்துவது தெரிய வந்தது. பின்னர், அந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்ததுடன் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது அரவேனு பகுதியில் விதிமுறைகளை மீறிய வியாபாரிகளிடமிருந்து ரூ.8 ஆயிரத்து 100, கோத்தகிரி பகுதியில் ஆயிரத்து 950 என மொத்தம் ரூ.10 ஆயிரத்து 50 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.