பேருந்து ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்த பள்ளி மாணவன்..!
சென்னையில் மாநகர பேருந்து ஓட்டுநரை தாக்கிய சம்பவத்தில் பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை மதுரவாயிலை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ். இவர் கொட்டூரில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர அரசு பேருந்தை ஓட்டி சென்ற போது தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் படிகட்டில் தொங்கியும் பேருந்தின் மேல் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் காளிதாஸ் போக்குவரத்து போலீசாரிடம் முறையிட்டுள்ளார். பின்னர் அட்டகாசம் செய்த மாணவர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதையடுத்து மீண்டும் அந்த பேருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வந்த போது 4 மாணவர்கள் ஓடி வந்து ஏறினர். இதில் மாணவர் தினேஷ்(வயது 19) என்பவர் ஓட்டுநர் காளிதாஸின் கன்னத்தில் இரு முறை அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் 4 பேரும் தப்பினர். இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் மாணவர் தினேஷை கைது செய்தார். மேலும் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்களின் மகன் உட்பட 3 சிறுவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.