பணத்தை திருப்பி கேட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு கொலை மிரட்டல்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 லட்சம் மோசடியில் பணத்தை திருப்பி கேட்ட தனியார் நிறுவன ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அருண் (வயது 48). அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய விரும்பினார். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அருணுக்கு, முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறினார். இதற்காக அவர் அருணிடம் ரூ.2 லட்சத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் குறிப்பிட்டது போல் வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அருண், சந்திரசேகரை தொடர்பு கொண்டு தனது பணத்தை திரும்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் சந்திரசேகர் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்து நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அருணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசில் அருண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகர் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.