காவிரி ஆற்றின் கரையில் மணல் அள்ளும் தனியார் நிறுவனம் - விவசாயிகள் குற்றச்சாட்டு...!

கரூர் அருகே காவிரி ஆற்றின் கரையில் அனுமதியின்றி மணல் அள்ளும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-03-24 16:00 GMT
கோப்புப்படம்
கரூர்,

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் அனுமதியின்றி மணல் அள்ளுவதால் அருகில் உள்ள விவசாய கிணறுகள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் அந்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில்,

தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றின் கரையில் தனியார் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிறுவனம் கட்டிடங்களுக்கு தேவையான கான்கிரீட் கலவை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த கான்கிரீட் கலவை தயார் செய்வதற்கு தேவையான மணலை தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அள்ளி பயன்படுத்தி வருகிறது.

ஆற்றின் கரையோரம் உள்ள பட்டா நிலங்களில் மணல் அள்ளக்கூடாது என்று விதி உள்ளது. இதனால் இந்நிறுவனம் இரவில் பல அடி ஆழத்திற்கு மணலை அள்ளிவிட்டு அதை மறைக்க அக்குழியில் செம்மண்ணை கொட்டி நிரப்பி விடுகிறது.

இவ்வாறு பல அடி ஆழத்திற்கு மணலை அள்ளுவதால் அதில் உள்ள நீரூற்று வற்றுகிறது. தற்போது கோடை காலமாக உள்ள நிலையில் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பயிரிட்டுள்ள தென்னை, கரும்பு, வாழை போன்ற பயிர்கள் போதுமான நீர் கிடைக்காததால் காய்ந்து வருகிறது.

மேலும் கரையை ஒட்டி மணல் அள்ளுவதன் மூலம் ஆற்றின் நீர்வளம் பாதிக்கப்படுவதோடு அப்பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளுக்கும் நீராதாரம் கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

தடையை மீறி தனியார் நிறுவனம் காவிரி ஆற்றின் கரையில் மணல் அள்ளுவதை தடுக்க சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்