நல்ல புத்தகங்களை படித்தால்தான் சிறந்த வாழ்வு அமையும்
நல்ல புத்தகங்களை படித்தால்தான் சிறந்த வாழ்வு அமையும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
நல்ல புத்தகங்களை படித்தால்தான் சிறந்த வாழ்வு அமையும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
தியாகிகள் தினம்
புதுச்சேரியில் நடந்த தியாகிகள் தினவிழாவுக்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
நமது நாட்டின் விடுதலைக்காக எத்தனையோ பேர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். இன்னல்களை அடைந்து விடுதலை பெற்று தந்துள்ளனர். அதனால் நாம் இப்போது சுதந்திரமாக உள்ளோம். இப்போது சுதந்திர தின விழாவின்போது குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் சுதந்திர போராட்ட தியாகிகளை அழைத்து கவுரவிப்போம். இந்த விழாவுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அடிமை வாழ்வு
மாணவர்கள் இந்திய நாடு சுதந்திரம் பெற்றது குறித்து அறிந்துகொள்ள வேண்டும். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாளைத்தான் தியாகிகள் தினமாக இப்போது அனுசரிக்கிறோம். அவர்கள் சுதந்திரத்துக்காக போராடி இளம் வயதிலேயே தூக்கிலிடப்பட்டு உள்ளனர்.
அப்படியானால் நாடு அடிமைப்பட்டு இருந்த காலத்தில் மக்கள் எவ்வளவு துயரப்பட்டு இருப்பார்கள். அடிமை வாழ்வு என்பது சாதாரணமானதல்ல. இந்த நேரத்தில் நாம் தமிழக, புதுச்சேரி தியாகிகளை நினைத்துப்பார்க்க வேண்டும்.
சிறந்த வாழ்வு
அதை எண்ணிப்பார்த்து நாட்டின் வளர்ச்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். நமது நாடு தலைசிறந்த நாடாகவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ பருவம் என்பது முக்கியமானது. ஆசிரியர், பெற்றோர், பெரியவர்களின் சொல்கேட்டு நடக்கவேண்டும்.
நல்ல புத்தகங்களை படிக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் சிறந்த வாழ்வு அமையும். புதுவை மாநிலத்தில் தியாகிகளுக்கான திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்துவோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.