எந்திர உதிரிபாகங்கள் திருடிய 3 சிறுவர்கள் கைது

ரோடியர் மில்லில் எந்திர உதிரிபாகங்கள் திருடிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-23 17:36 GMT
புதுச்சேரி முதலியார்பேட்டை-கடலூர் சாலையில் ரோடியர் மில் உள்ளது. மிகவும் பழமையான இந்த மில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட புயலால் சேதம் அடைந்தது. அதன்பின்னர் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. சமீப காலமாக இந்த மில்லில் எந்திரங்கள் திருடு போவதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசார் அவ்வப்போது ரோடியர் மில் பகுதியில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று  பட்டப்பகலில் 3 சிறுவர்கள் ரோடியர் மில் பின்புறம் தியாகுமுதலியார் நகர் பகுதியில் ஒரு பையுடன் வந்தனர். போலீசாரை பார்த்த உடன் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், மில்லில் உள்ள எந்திரங்களின் உதிரிபாகங்களை திருடியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.  இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்