நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலி- டிரைவர் கைது

காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Update: 2022-03-23 14:32 GMT
சென்னை, 

சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் கடந்த 18-ந்தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி(வயது 70) என்பது தெரியவந்தது.

மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து போலீசார் நடத்திய விசாரனையில், அந்த கார் நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம்(29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்