விருதுநகர் பாலியல் வழக்கு... அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் ...பொறுத்திருந்து பாருங்கள்...முதல்-அமைச்சர் பேச்சு
விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் புகார் வந்தவுடன் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வண்ணம் கண்காணிக்கப்படும்.
பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு, சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்குள் எடுத்து செல்லப்படும். மேலும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும். அதிகபட்ச தண்டனையும் பெற்று தரப்படும். விருதுநகர் பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில், தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும். இதுப்போன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார். என கூறினார்.