திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்? தாய்-தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தாய் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-03-23 02:20 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே தனது பெற்றோரை கொடூரமாக கொலை செய்த  மகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே மண்டையூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). விவசாயி. இவரது மனைவி வள்ளி (57). ரெங்கசாமி நாவலிங்ககாடு பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கேயே குடியிருந்து வந்தார். அவருக்கு பாலசுந்தர் (24), கோபி (22) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.  கோபி என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பாலசுந்தர் கேட்டரிங் படித்துள்ளார்.

இந்நிலையில் பாலசுந்தர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் போகாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். மேலும் அவரது தாய் தந்தையிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். 

மனநல பாதிப்பு

இதைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் பாலசுந்தரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தனது மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் ரெங்கசாமியிடம் சென்று உனது மகனுக்கு முனி பிடித்துள்ளது பூசாரியை வரவழைத்து அதை விரட்டி விடலாம் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ரெங்கசாமி நேற்று உடுக்கை அடிக்கும் பூசாரியை தொடர்பு கொண்டு வீட்டிற்க்கு அழைத்துள்ளார்.

இந்த தகவல் பாலசுந்தருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ரெங்கசாமி அவரது வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பாலசுந்தர் வீட்டிற்க்கு வருமாறு தனது தந்தை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

கொடூர கொலை 

இதையடுத்து வழக்கம்போல் மாலை 5.45 மணியளவில் ரெங்கசாமியின் வீட்டில் பால் கறந்து செல்லும் பால்காரர் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் உட்கார்ந்திருந்த பாலசுந்தரிடம் பால் கறக்க வேண்டும் உன்னுடைய அப்பா, அம்மா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததை தொடர்ந்து பால்காரர் அவர்களது வீட்டை ஒட்டிய தாழ்வாரத்தில் அமைக்கப்பட்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.

போலீஸ் விசாரணை 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் அருகில் உள்ளவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் ஆகியோர் மண்டையூருக்கு சென்று  தம்பதியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 

தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று மீண்டும் நடந்து வீட்டிற்கு வந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து தம்பதியினர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஒப்புதல்

மேலும் பாலசுந்தர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், தனது பெற்றோரிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பாலுவை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது தனது தாய் தந்தையரை கொடூரமாக கழுத்தை அறுத்தும் அடித்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 

மேலும் திருமணம் செய்து வைக்காததால் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மகனே தனது தாய்-தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்