அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது பரிதாபம்
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வெள்ளனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியானார். மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது இந்த பரிதாபம் நடந்தது.
அன்னவாசல்:
பூப்புனித நீராட்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம், ராஜவயல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 56). இவர் வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு அபிநயா என்ற மகளும், பாலமுருகன் என்ற மகனும் உள்ளனர். வருகிற 30-ந்தேதி தனது மகள் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்காக கடந்த 10 நாட்களாக சண்முகம் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் திரும்பி புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் பலி
அன்னவாசல் அருகே சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளை சாலை ஓரத்தில் நிறுத்தி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார் சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ராஜா என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.