திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாக நடைபெறும் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 6 மணிக்கு கிரிவலப்பாதையில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை,
முருகப்பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 15 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. திருவிழாவின் முத்தாய்ப்பாக நேற்று முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபோகம் கோலாகலமாக நடந்தது.
இதனையடுத்து பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று(22-ந்தேதி) காலை 6 மணிக்கு கிரிவலப்பாதையில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பாரம்பரிய முறைப்படி கிராம நாட்டாண்மைக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேளதாளங்கள் முழுங்க தெய்வானையுடன் உற்சவர் தேரில் எழுந்தருளுகிறார். அரோகரா கோஷம் எழுப்பியபடி ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பித்து இழுத்துச் செல்கின்றனர்.