இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33 ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன முதல்-அமைச்சர் தகவல்

இன்னுயிர் காப்போம் திட்டத்தால் 33 ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2022-03-21 23:55 GMT
சென்னை,

சட்டசபையில் கேள்வி நேரத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் (சேலம் மேற்கு) தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:-

சாலை விபத்துகள்

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதே, நான் பலமுறை இந்த சாலை விபத்துகளை பற்றி, அதனுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதை பற்றி கவலையுற்று உரையாற்றி இருக்கிறேன். ஆகவே, அதை மனதிலே வைத்து நாங்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன், சாலைகளில் மக்களுக்கு பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டும் என்பதை இந்த அரசினுடைய முதன்மையான இலக்காக நாங்கள் அமைத்து கொண்டிருக்கிறோம்.

அதற்காக என்னுடைய தலைமையில் உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்றை கடந்த 18-11-2021 அன்று கூட்டி ஆலோசித்து, இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும்-48 என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கக்கூடிய இலவச சிகிச்சை, சாலை பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம்-உதவி செய் என்ற 5 அம்சத்திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

33 ஆயிரம் குடும்பங்கள்

நானே கடந்த 18-12-2021 அன்று மேல்மருவத்தூர் சென்று இன்னுயிர் காப்போம்-நம்மை காப்போம் 48 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். அன்று முதல் இத்திட்டம் மிகத்தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு சாலைகளில் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான அனைத்து சூழல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் விபத்துகளில் சிக்குவோருடைய உயிர் காப்பாற்றப்படுகிறது. 18-12-2021 முதல் 18-3-2022 வரை அரசு ஆஸ்பத்திரிகளில் 29 ஆயிரத்து 142 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 4,105 பேரும் ஆக மொத்தம் 33 ஆயிரத்து 247 பேர் இந்த 48 மணி நேர இலவச சிகிச்சையை பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு சிகிச்சை பெற்றார்கள் என்பதை விட, 33 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கின்றன என்பதை நான் இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நற்கருணை வீரன்

நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இந்த திட்டத்திற்காக இதுவரை 29.56 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்பதையும், இத்திட்டம் மேலும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக்கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு, அரசு இனி வரும் காலங்களிலும் தீவிரமாக செயல்படும்.

சாலை விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக விரைவாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்து அனுமதித்து, உயிரை காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்