நாமக்கல்: எலியை கொல்ல அமைத்த மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி..!
ராசிபுரம் அருகே பெருச்சாளிகள் வருவதை தடுக்க அமைத்த மின் வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி கிராமம், அத்திபலகானூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சூர்யா (வயது-21). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஜெகநாதன் என்ற விவசாயின் கோழிப்பண்ணையில் கடந்த 8 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். கோழிப்பண்ணையில் பெருச்சாளிகள் வருவதால் அவற்றைக் கொல்வதற்காக மின்வேலியை அரசு அனுமதியின்றி விவசாயி ஜெகநாதன் போட்டிருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் சூர்யா வேலைக்கு செல்லும் போது எதிர்பாராதவிதமாக சூர்யா மீது கோழிப்பண்ணையில் போடப்பட்டிருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூர்யாவின் தாயார் நல்லம்மாள் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். கோழிப் பண்ணையின் உரிமையாளர் ஜெகநாதன் அரசு அனுமதியின்றி மின் வேலி அமைத்ததாகவும், கவனக் குறைவாக அமைத்ததால் எனது மகன் மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கப்பட்டு இறந்துள்ளான். எனது மகன் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் ராசிபுரம் போலீஸ் நிலையத்தை திடீரென்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.