கிண்டியில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை : அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கிண்டியில் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

Update: 2022-03-21 04:10 GMT
சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஏற்கனவே 8 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தற்போது மேலும் 4 ஏக்கர் பரப்பில் 6 தளங்களுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. 

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்டிடம் கட்டுவதற்கான  பணிகளை தொடங்கி வைத்தார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிண்டியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இந்த மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு கட்டப்பட உள்ளது.

பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்