வீடு புகுந்து பெண் மானபங்கம்
வீடு புகுந்து பெண்ணை மானபங்கம் படுத்திய மருத்துவமனை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 49). தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வரிச்சிக்குடி பகுதியில் கணவரை இழந்து வசிக்கும் 58 வயது பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். சமையல் அறையில் வேலை செய்துகொண்டிருந்த அந்த பெண்ணை சங்கர் கட்டிப்பிடித்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மிளகாய் பொடியை சங்கர் முகத்தில் வீசிவிட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதற்குள் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர்.