ஈரோடு: பைக்கை திருடிய 4 மணி நேரத்தில் சிக்கிய திருடன்..!
ஈரோடு அருகே பைக்கை திருடிய 4 மணி நேரத்தில் கையும்களவுமாக சிக்கிய திருடனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், சென்னிலை பிடாரியூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் நேற்று பகல் 12 மணியளவில் பெருந்துறை பவானி ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிர்புறத்தில் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராமலிங்கத்தின் பைக்கை எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் திருடிய பைக்கை மாலை 4 மணியளவில் ,பெருந்துறை பவானி ரோடு அண்ணா சிலை அருகே ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தாராம். அப்போது ராமலிங்கத்தின் நண்பர்கள் சிலர் அப்பகுதியில் சென்றுள்ளனர். அவர்கள் ராமலிங்கத்தின் வண்டி எண்ணை அறிந்து வைத்திருந்ததால் பைக்கை திருடியவரை சுற்றி வளைத்து பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர் ஈரோடு அருகே நத்தக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் லோகநாதன்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து லோகநாதன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்டிரேட் சபினா,லோகநாதனை 15 நாள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.