புதுச்சேரியில் காவலர் பணிக்கான எழுத்து தேர்வு 2 ஆயிரத்து 626 பேர் எழுதினர்
புதுவையில் 5 மையங்களில் நடந்த காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 626 பேர் எழுதினர்.
புதுச்சேரி
புதுவையில் 5 மையங்களில் நடந்த காவலர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 626 பேர் எழுதினர்.
5 மையங்கள்
புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த உடல் தகுதி தேர்வில் 2 ஆயிரத்து 644 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
அவர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளி, செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி, சங்கரவித்யாலாயா பள்ளி, வள்ளலார் அரசுப்பள்ளி, இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடுமையான சோதனை
எழுத்து தேர்வுக்கு வந்த இளைஞர்களின் நுழைவுச்சீட்டுகளை சரிபார்க்கப்பட்டு கடுமையான சோதனைக்குப்பின் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். எலக்ட்ரானிக் பொருட்கள் எதுவும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து தேர்வு எழுத வந்தவர்கள் தங்களது செல்போன் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் சாதனங்களை தங்களுடன் வந்திருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.
99 சதவீதம் பேர்
காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் தேர்வுகள் நடந்தன. தேர்வுகள் எழுத தகுதி பெற்ற 2 ஆயிரத்து 644 பேரில், 2 ஆயிரத்து 626 பேர் தேர்வுகளை எழுதினார்கள். அவர்களில் 1,952 பேர் ஆண்கள், 674 பேர் பெண்கள் ஆவர். அதாவது 99.32 சதவீதம் பேர் தேர்வை எழுதினார்கள்.
காலையில் கணக்கு, உயிரியல், உடற்கல்வி அறிவியல் உள்ளிட்டவற்றில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. பிற்பகலில் ஆங்கிலம் அறிவியல், தற்கால நிகழ்வுகள், பொது அறிவு குறித்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகள் கடினம்
காலையில் நடந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாகவும், பிற்பகலில் நடந்த தேர்வு சற்று எளிதாக இருந்ததாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். தேர்வு மையங்களுக்கு போலீஸ் டிஐ.ஜி. மிலிந்த் தும்ரே நேரில் சென்று ஆய்வு செய்தார்.
------
(பாக்ஸ்) ஆஷா பணியாளரிடம் குழந்தையை ஒப்படைத்து சென்ற தாய்
புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் காவலர் தேர்வு எழுத செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு வந்தார். அப்போது அவர் தனது கைக்குழந்தையையும் கையோடு கொண்டு வந்திருந்தார். தேர்வு மையத்துக்கு வந்து அந்த குழந்தையை வாங்கிக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தேர்வு நேரம் நெருங்கும் வரை உறவினர்கள் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அந்த பெண் அங்கிருந்த ஆஷா பணியாளர் ஒருவரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு தங்கள் உறவினர்கள் வந்ததும் குழந்தையை கொடுத்துவிடுமாறு கூறிவிட்டு தேர்வு மையத்துக்குள் செல்ல முயன்றார். அறிமுகம் இல்லாதவர்களின் கைக்கு சென்ற அந்த குழந்தை பயத்தில் அழத்தொடங்கியது. இருப்பினும் போலீஸ் வேலைக்காக தனது மனதை கல்லாக்கி கொண்டு அந்த பெண் தேர்வு எழுத சென்றார். ஆஷா பணியாளர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் குழந்தையின் நிறுத்த முடியவில்லை. ஆஷா பணியாளர் ஒருவர் தாயுள்ளத்தோடு அந்த குழந்தையை ஆசுவாசப்படுத்தி அழுகையை நிறுத்தினார். சிறிது நேரத்தில் குழந்தையின் உறவினர்கள் தேர்வு மையத்துக்கு வந்தனர். அதன்பின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் அவர்களிடம் விசாரணை நடத்தி குழந்தையை ஒப்படைத்தார். கதறி அழுத குழந்தையை ஆசுவாசப்படுத்திய ஆஷா பணியாளரை அனைவரும் பாராட்டினர்.