தமிழக அரசு பயிற்சி மையத்தின் மாதிரி ஆளுமை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழக அரசின் பயிற்சி மையம் நடத்தும் மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-18 19:10 GMT
சென்னை,

அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இயக்குனரும், பயிற்சித்துறை தலைவரும், தலைமைச்செயலாளருமான வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளில் (சிவில் சர்வீசஸ்) அடங்கிய முதல்நிலை, முதன்மை தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி மையத்தில் 2021-22-ம் ஆண்டில் முதன்மை தேர்வுக்கு பயின்ற மொத்தம் 80 தேர்வர்களில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 2 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதிரி ஆளுமை தேர்வு

பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற அகில இந்திய குடிமைப் பணி அதிகாரிகளாலும், தலைசிறந்த வல்லுனர்களாலும், இந்த மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது. இது தேர்வர்கள் தங்கள் மாதிரி தேர்வை மிகச்சிறப்பாக எதிர்கொள்ள உதவும். தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்கள் தவிர, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேர்வர்களும் இந்த மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கு கட்டணம் கிடையாது. அவ்வாறு பங்குபெற விரும்பும் தேர்வர்கள் தங்களது விருப்பத்தை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது 044-24621909 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமை தேர்வுக்கான தேதி குறித்த விவரங்கள் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். ஆளுமை தேர்வுக்காக டெல்லி செல்லும் இந்த மையத்தில் பயின்று தேர்வான தேர்வர்களுக்கு பயண செலவுத்தொகையாக ரூ.2 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. சென்ற ஆண்டு இது ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்