கொரோனா தொற்று வீழ்ச்சி சுற்றுலா பயணிகளால் களைகட்டும் புதுச்சேரி
கொரோனா தொற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து, புதுச்சேரி களைகட்டி வருகிறது.
புதுச்சேரி
கொரோனா தொற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து, புதுச்சேரி களைகட்டி வருகிறது.
கொரோனா அச்சம்
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று பாதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுச்சேரியிலும் ஒரு சில நாட்களில் சிலர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சில நாட்கள் ஒருவர்கூட பாதிக்கப்படுவதில்லை.
இதனால் கொரோனா பரவல் குறித்த அச்சத்திலிருந்து மக்கள் விடுபட்டு சகஜ நிலைக்கு வந்துள்ளனர். இதன் காரணமாக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
அலைமோதும் கூட்டம்
கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததைப்போல் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் தற்போது புதுவையில் சகஜமாகியுள்ளது. வார இறுதி நாட்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
காலை வேளைகளில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்களுடன் உள்ளூர் மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. சூரிய உதயத்தை கூட்டம் கூட்டமாக நின்று ரசிக்கின்றனர்.
உடற்பயிற்சி
அதுமட்டுமின்றி கடற்கரை சாலையில் உள்ள உடற்பயிற்சி கருவிகளை கொண்டு உடற்பயிற்சியும் செய்து வருகின்றனர். தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் மாலை நேரங்களிலும் கடற்கரைக்கு காற்று வாங்க வரும் மக்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது.