தமிழகத்தில் வனப்பரப்பை உயர்த்த 2½ கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் அமைச்சர் தகவல்

தமிழகத்தில் வனப்பரப்பை உயர்த்த 2½ கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2022-03-17 19:03 GMT
வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று விலங்குகள் இருப்பிடங்கள் மற்றும் பறவைகள் கூடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பூங்கா இயக்குனர் கருணபிரியாவிடம் அமைச்சர், விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் பூங்காவின் பாதுகாப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்து அனைத்து வன உயிரினங்களுக்கான உணவு வழங்குதல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6 கோடி நிதி வழங்கி உள்ளார்.

பறவைகள், விலங்குகளின் பாதுகாப்பு

இந்தியாவிலேயே வண்டலூர் உயிரியல் பூங்கா மிகவும் சிறப்பானதாக திகழ்கிறது. இதில் கூடுதல் வசதிகளை உருவாக்கி பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை சிறப்பாக நிறைவேற்றிட ரூ.15 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பூங்காவில் பழுதடைந்துள்ள விலங்குகளில் கூண்டுகள், பறவைகள் கூடாரங்கள் முழுமையாக புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பூங்காவில் விலங்குகளுக்கு நல்ல உணவு வழங்கவும், கோடைக்காலத்தில் குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2½ கோடி மரக்கன்று நட முடிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திட வரும் 2 ஆண்டுகளில் மட்டும் 2½ கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான பெரும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வரும் 10 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு 31 கோடி மரக்கன்றுகள் வீதம் பல்வேறு திட்டங்களில் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆய்வின் போது கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் பூங்கா இயக்குனர் கருணபிரியா, துணை இயக்குனர் டாக்டர் காஞ்சனா, கிண்டி தேசிய பூங்கா வன உயிரினக்காப்பாளர் பிரசாந்த், உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் தயாசேகர், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்