ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் ரகளை நடந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் ரகளை சம்பவம் நடந்தால், தேர்தல் அதிகாரி மீது மட்டுமல்லாமல் போலீஸ் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.

Update: 2022-03-16 22:03 GMT
சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியின் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலின்போது தி.மு.க. கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதையடுத்து இந்த தேர்தலை விரைவாக நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வாக்குச்சீட்டை பறித்து ரகளையில் ஈடுபட்ட தி.மு.க., கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தது.

பணியிடை நீக்கம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆடுதுறை பேரூராட்சியின் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்திய தேர்தல் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்துள்ளதாகவும், வருகிற 23-ந்தேதி இந்த தேர்தல் மீண்டும் நடத்தப்பட உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எச்சரிக்கை

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஆடுதுறை பேரூராட்சியின் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இந்த தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பை தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு வழங்க வேண்டும். மீண்டும் ஏதாவது ரகளை சம்பவம் நடந்தால், தேர்தல் அதிகாரி மட்டுமல்லாமல் போலீஸ் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்