அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி

உயர் சிறப்பு படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பு சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-16 19:44 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு அரசு அதன் அரசாணைப்படியும், மாநில இடஒதுக்கீட்டின்படியும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்திக்கொள்ளலாம் என்று இன்று (நேற்று) வழங்கிய இடைக்கால தீர்ப்பில் தெரிவித்துள்ளது. உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்குகள், ஹோலி விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் அரசு டாக்டர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு இருந்த தடை விலகியுள்ளது. இது இதற்கான அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதற்காக போராடிய பா.ம.க., கோர்ட்டுகளில் சட்டப் போராட்டம் நடத்திய அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த வெற்றி. சமூகநீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ரத்து செய்யவேண்டும்

சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள தமிழக அரசின் அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படும்போதுதான் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் இறுதி வெற்றி கிடைக்கும். சுப்ரீம் கோர்ட்டில் இதற்காக வலுவான வாதங்கள் முன்வைக்கப்படுவதை தமிழ்நாடு அரசும், டாக்டர் அமைப்புகளும் உறுதி செய்யவேண்டும். ஒவ்வொரு மாநிலமும் அதன் மருத்துவ கட்டமைப்பையும், மருத்துவ சேவையையும் வலுப்படுத்துவதற்கு மருத்துவ மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு படிப்பு பயின்ற டாக்டர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை.

அகில இந்திய ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்துநிலை மருத்துவப் படிப்பு இடங்களை பிற மாநிலத்தவருக்கு மத்திய அரசு தாரை வார்ப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் இதய நோய், குழந்தைகளுக்கான இதய நோய், நரம்பியல் நோய், சிறுநீரகவியல், குழந்தைகள் நலம் உள்ளிட்ட துறைகளில் வல்லுனர்களே இல்லாத நிலை உருவாகி விடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அகில இந்திய ஒதுக்கீடுதான். அதனால், மருத்துவக்கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்