கேரளாவுக்கு அதிகப்படியான கனிமவளங்கள் ஏற்றி சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்..!

புளியரை சோதனைச்சாவடியில், கேரளாவுக்கு அதிகப்படியான கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-03-16 09:30 GMT
தென்காசி,

தென்காசி மாவட்டம், தமிழக கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில் சில வாகனங்கள் அதிகப்படியான எடையுடன் கேரளாவுக்கு கனிம வளங்களை கொண்டு செல்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதன் பேரில் இன்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனையிட்டதில் அதிகப்படியான எடையுடன் கனிமவளங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தற்போது அனைத்து வாகனங்களையும் எடையிட்டு அதற்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதால் ஆங்காங்கே சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு 2 ஆயிரம் அபராதம் மற்றும் அதிக எடை ஒரு டன்னுக்கு 1000 என ஒரு வண்டிக்கு சுமார் 13 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது அதிக எடையுடன் வந்த ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 10 முதல் 20 டன் வரையிலான கனிம வளக்கடத்தல் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13 வாகனங்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்